×

பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்கள் வெளியிட்ட விவகாரம் : 14 தயாரிப்புகளின் உற்பத்தி உரிமத்தை ரத்து செய்தது உத்தராகண்ட் அரசு!!

டெஹ்ராடூன் : பாபா ராம் தேவின் பதஞ்சலி ஆயுர்வேதம் மற்றும் திவ்யா மருந்தகத்தின் 14 தயாரிப்புகளின் உற்பத்தி உரிமத்தை உத்தராகண்ட் அரசு ரத்து செய்துள்ளது. தவறான விளம்பரங்கள் மூலம் பொது மக்களை பதஞ்சலி நிறுவனம் ஏமாற்றுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், அந்த நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்தது. இந்த வழக்கில் தவறான தகவல்களை வெளியிட்டதற்காக வழக்கறிஞர் வாயிலாக பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு கேட்டதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், பதஞ்சலி நிறுவனர்கள் பாபா ராம்தேவ், பால கிருஷ்ணா நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தது.

இதையடுத்து அவர்கள் இருவரும் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டனர். ஆனால் இருவரின் மன்னிப்பை ஏற்க மறுத்த நீதிபதிகள், பத்திரிகை வாயிலாக பொது மன்னிப்பு கேட்கவும் உத்தரவிட்டனர். மேலும் தவறான பிரச்சாரங்களில் ஈடுபடும் அதிக நுகர்வுகொண்ட நுகர் பொருட்கள் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அமைச்சகங்களுக்கும் உத்தராகண்ட் அரசுக்கும் உத்தரவிட்டனர். இந்த நிலையில் பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிரான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பதஞ்சலி நிறுவனத்தின் 14 பொருட்களுக்கு தடை விதித்துள்ளதாக உத்தராகண்ட் அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. திவ்யா மருந்தகத்தின் இந்த பொருட்கள் தவறாக விளம்பரம் செய்யப்படுவதால் தடை செய்யப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பதஞ்சலி நிறுவனத்தின் ‘ஸ்வசாரி கோல்ட்’, ‘ஸ்வசாரி வதி, ப்ரோஞ்சோம்’, ‘ஸ்வசாரி பிரவாஹி’, ‘ஸ்வசாரி அவளே’, ‘முக்தாவதி எக்ஸ்ட்ரா பவர்’, ‘லிபிடோம்’, ‘பிபி கிரிட்’, ‘மதுக்ரிட்’, ‘மதுநாஷினிவதி கூடுதல் பவர்’, ‘லிவாமிர்த் அட்வான்ஸ்’ ‘, ‘லிவோக்ரிட்’, ‘ஐகிரிட் கோல்ட்’ மற்றும் ‘பதஞ்சலி த்ரிஷ்டி கண் சொட்டு மருந்து’ ஆகியோர் 14 பொருட்களின் தயாரிப்பு உரிமத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்கள் வெளியிட்ட விவகாரம் : 14 தயாரிப்புகளின் உற்பத்தி உரிமத்தை ரத்து செய்தது உத்தராகண்ட் அரசு!! appeared first on Dinakaran.

Tags : Patanjali ,Uttarakhand government ,Dehradun ,Baba Ram Dev ,Patanjali Ayurveda ,Divya Pharmacy ,Dinakaran ,
× RELATED பதஞ்சலி நிறுவன நீதிமன்ற அவமதிப்பு; வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு